முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஆன்லைன் செஸ் போட்டி: அடுத்த மாதம் நடக்கிறது

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகமே முடங்கி போய் கிடக்கிறது. இதனால் சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் இருக்கின்றன. இந்த இக்கட்டான நிலைமைக்கு மத்தியிலும் தடங்கல் இல்லாமல் நடைபெறும் போட்டியாக செஸ் (சதுரங்கம்) மட்டுமே விளங்கி வருகிறது. சமீபத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆன்லைன் மூலம் செஸ் விளையாடி கொரோனா பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டினார்கள்.

இந்த நிலையில் சர்வதேச செஸ் சம்மேளனம் மற்றும் செஸ் டாட் காம் சார்பில் நேஷன்ஸ் கோப்பைக்கான ஆன்லைன் செஸ் போட்டி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் சீனா, ஐரோப்பா, இந்தியா, ரஷியா, அமெரிக்கா, மற்றும் உலகின் பிற பகுதிகள் என 6 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. அனைத்து அணிகளிலும் முன்னணி வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரேபிட் (விரைவு) முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 2 முறை லீக் சுற்றில் மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 4 பேர் இடம் பிடிப்பார்கள். இதில் வீராங்கனை ஒருவரும் அடங்குவார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் இடம் பெற்றுள்ளார். தற்போது ஜெர்மனியில் இருக்கும் அவர் அங்கிருந்தபடி இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் உலக சாம்பியனான விளாடிமிர் கிராம்னிக் (ரஷியா) இந்திய அணிக்கும், முன்னாள் உலக சாம்பியனான கேரி காஸ்பரோவ் (ரஷியா) ஐரோப்பிய அணிக்கும் கேப்டனாக இருப்பார்கள் என்று தெரிகிறது.

போட்டியின் போது வீரர்கள் வெளியில் இருக்கும் நபர்கள் யாரிடம் இருந்து ஆலோசனை எதுவும் பெறக்கூடாது. வீரர்கள் விளையாடும் அறை மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். அத்துடன் இந்த போட்டியை சர்வதேச நடுவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கவனிப்பார்கள். இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.1 கோடியே 37 லட்சம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

திருமதி பூமணி கனகசபாபதி
17-06-2020, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் மேற்கு